தலைமையகத்தில் துவங்கிய ஒரு மாத பேச்சாளர் பயிற்சி வகுப்பு
தலைமையகத்தில் துவங்கிய ஒரு மாத பேச்சாளர் பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியப்பிரச்சாரம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் வீரியத்தோடு வெற்றிகரமாக சென்றடைந்து வரும் இவ்வேளையில் இந்த ஏகத்துவப் புரட்சியின் விளைவாக நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன.
கிளைகள் பெருகப் பெருக நாளுக்கு நாள் பிரச்சாரக் கேந்திரங்களாகத் திகழக்கூடிய தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. இதன் விளைவாக இந்த சத்தியப்பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய வகையிலான பிரச்சாரக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஜுமுஆ உரைகள், மெகா ஃபோன் பிரச்சாரம், குழு தாவா, கிராம தாவா, பொதுக்கூட்டங்கள் என்று பல வகைகளில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகள் மற்றும் மாவட்டங்கள் மூலம் இந்த அழைப்புப்பணி அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இந்நிலையில் இந்த சத்தியப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கக்கூடிய, எடுத்தியம்பக்கூடிய பிரச்சாரகர்கள் போதிய அளவு இல்லாதது நமக்கு பெரிய தடைக்கல்லாக உள்ளது. அந்தத் தடையை உடைத்தெறியும் வகையிலும், அதிகமான பிரச்சாரகர்களை இன்னும் உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகம் தீட்டிய திட்டம் தான், “பேச்சாளர்களுக்கான ஒரு மாத சிறப்புப் பயிற்சி முகாம்”.
இந்தப் பயிற்சி முகாம் கடந்த ஆண்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்தில் வைத்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதில் அதிகமான மாணவர்கள் வந்து கலந்து கொண்டு கல்வி பயின்று கிட்டத்தட்ட நூற்றுக்கும் நெருக்கமான புதிய பேச்சாளர்கள் புத்துணர்வோடு வெளியேறினர்.
தற்போது கிறித்தவர்களுடனான விவாதங்களில் கலந்து கொண்டு கிறித்தவர்களை மூச்சுத்திணற வைக்கும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர் தாங்கல் ஹபீபுல்லாஹ் அவர்கள் சென்ற ஆண்டு ஒரு மாத பேச்சாளர் பயிற்சி முகாமில் தயாரானவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக இந்தத் திட்டம் அல்லாஹ்வின் மகத்தான கிருபையில் வெற்றி பெறவே இந்த ஆண்டும் பேச்சாளர்களின் பற்றாக் குறையைக் கருத்தில் கொண்டு தலைமையகத்தில் ஒரு மாத பேச்சாளர் பயிற்சி முகாமை நடத்துவது என்று முடிவெடுத்து அறிவிப்புச் செய்யப்பட்டது.
பல மாவட்டங்களிலிருந்தும் ஆர்வத்தோடு பல மாணவர்கள் இதில் வந்து தற்போது கல்வி பயின்று வருகின்றனர்.
தினந்தோறும் சுப்ஹுத் தொழுகைக்குப் பிறகு “திருக்குர்ஆனை சரியான உச்சரிப்பில் ஓதப்பழக்கக் கூடிய வகையில் திருக்குர்ஆன் வாசிப்பதற்கான வகுப்புகளுடன் பாடங்கள் ஆரம்பமாகின்றன. அதைத் தொடர்ந்து காலை உணவு இடைவேளைக்குப் பிறகு சகோதரர் பீஜே அவர்கள், “ஹதீஸ் கலை” என்ற தலைப்பில் பாடங்களை நடத்துகின்றார்.
இதில்,
· ஹதீஸ்கள் என்றால் என்ன?
· ஹதீஸ்கள் எப்போது தொகுக்கப்பட்டன?
· ஹதீஸ் கலையின் துவக்கம் எப்போது?
· ஹதீஸ் கலையைத் தொகுத்தவர்களின் வாழ்க்கை வரலாறு என்ன?
· முதன் முதலில் இந்தக் கலையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது யார்?
· ஹதீஸ்களில் வரும் அறிவிப்பாளர்களின் குறைகளை விமர்சிப்பது சரியா?
என்பன உள்ளிட்ட ஹதீஸ்கள் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் தொகுத்து பேச்சாளர்களுக்கு எளிய வகையில் புரியும் வகையில் பாடங்களை நடத்துகின்றார்.
அதைத் தொடர்ந்து சகோதரர் சையது இப்ராஹீம் அவர்கள் “தவ்ஹீத் ஜமாஅத்தும், அதற்கு எதிரான இயக்கங்களும் ஓர் ஒப்பீடு” என்ற தலைப்பில்,
· தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் அதனை எதிர்க்கக்கூடிய இயக்கங்களுக்கும் உள்ள அடிப்படை கொள்கை வேறுபாடுகள் என்ன?
· நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் என்னென்ன?
· அதற்கான பதில்கள் என்ன?
· தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு விஷயத்திலும் தனித்து இருப்பது ஏன்?
· தவ்ஹீத் ஜமாஅத் எடுத்துள்ள நிலைபாடுகளுக்கான விளக்கங்கள் என்ன?
என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் தொகுத்து வழங்குகின்றார்.
சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள், “சர்ச்சைக்குரிய சட்டங்கள்” என்ற தலைப்பில், விரல் அசைத்தல், நெஞ்சில் தக்பீர் கட்டுதல் உள்ளிட்ட சட்டங்களில் இவற்றை எதிர்க்கக் கூடியவர்கள் வைக்கக்கூடிய ஆதாரங்கள் என்னென்ன? அவை எந்த அடிப்படையில் போலியானவை என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் வகையில் பாடம் நடத்துகின்றார்.
சகோதரர் கித்ர் அவர்கள் திருக்குர்ஆன் உச்சரிப்புகளை சரி செய்தல் மற்றும் திருக்குர்ஆனை ஓதக்கற்றுக் கொடுத்தல் ஆகிய வகுப்புகளை எடுத்து வருகின்றார்.
மேலும், சகோதரர் பீஜே அவர்கள் தினமும் ஒரு மணி நேரம் பேச்சாளர்களைப் பேசச் சொல்லி அவர்களுக்குரிய ஒழுங்குமுறைகளைக் கற்றுக் கொடுக்கும் பேச்சுப் பயிற்சியளிக்கும் வகுப்பையும் எடுத்து வருகின்றார்.
அது மட்டுமல்லாமல், தினந்தோறும் அஸர் தொழுகைக்குப் பிறகு சென்னையிலுள்ள ஒவ்வொரு பகுதியாகத் தேர்ந்தெடுத்து அந்தந்த பகுதிகளின் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளின் வழிகாட்டுதல்களுடன், “இஸ்லாம் கூறும் கடவுட்கொள்கை, யார் இவர்?” போன்ற துண்டுப்பிரசுரங்களை வினியோகம் செய்வதுடன், வீடுவீடாகச் சென்று குழு தாவா செய்வதற்கான பயிற்சியும் வழங்கப்படுகின்றது. வாரத்தில் ஒரு முறை கிராமங்களைத் தத்தெடுத்து தாவா செய்வதற்குண்டான பயிற்சியும் வழங்கப்படுகின்றது.
தங்களது பொருளாதாரத்தையும், நேரத்தையும் தியாகம் செய்துவிட்டு சிறந்த பேச்சாளர்களாக உருவாக வேண்டும் என்று வந்திருப்பவர்களின் ஆவலை இறையருளால் பூர்த்தி செய்யும் அடிப்படையில் நிகழ்ச்சி நிரல்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக இந்த பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றது. நடத்தப்படும் பாடங்கள் அனைத்தும் வீடியோ கவரேஜ் செய்யப்பட்டு டிவிடிக்களாகவும் இன்ஷா அல்லாஹ் வெளிவர உள்ளன.
இந்த ஜமாஅத்தின் அத்தியாவசியத் தேவையாக இருக்கக்கூடிய இந்தப் பேச்சாளர் தேவையை இந்த பயிற்சி முகாம் மூலம் நிவர்த்தி செய்ய வல்ல இறைவன் அருள்புரிவானாக!